ஊவா மாகாணத்தில் கடந்த ஒரு வார காலமாக அடை மழை பெய்து வருவதால் பிரதான போக்குவரத்து வீதிகளில் மண்மேடுகள் சரிந்தது விழும் அபாயம் நிலவுவதால் வாகன சாரதிகளும், பாதசாரிகளும் பயணங்களின் போது கூடுதல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அந்நிலையம்;
வீதி விஸ்தரிப்பிற்காக செப்பனிடப்பட்டு வரும் பதுளை- பசறை வீதி மற்றும் பசறையிலிருந்து நமுனுகுல வழியாக எல்ல வரை செல்லும் வீதி என்பவற்றில் இவ்வாறு மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் அதிகரித்து காணப்படுவதுடன் கடும் மழை காரணமாக பனியுடன் கூடிய புகை மண்டலத்துடன் காலநிலை நிலவுவதால் வாகன சாரதிகள் வாகன விளக்குகளை ஒளிர விட்டு வாகனங்களை செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக வாகன போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த எல்ல- வெல்லவாய வீதியில் கற்பாறைகள் சரியும் நிலை காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை வீதி மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
கடும் மழையின் போது குடியிருப்புகளுக்கு அருகே மழை நீரை தேங்க விடாது வடிகால்களில் ஓட விடுவதன் மூலம் வீணான அனர்த்தங்களை தடுக்க முடியும் எனவும் அவசர அனர்த்த நிலைமைகளின் போது பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு அந்நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.