ஐஎஸ் அமைப்பினால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயரில் முன்னெடுக்கப்பட்ட பக்தாதிக்கு எதிரான நடவடிக்கை

304 0

ஐஎஸ் அமைப்பின் தலைவரிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு 2015 இல் அந்த அமைப்பினால் கொலை செய்யப்பட்ட பெண் மனிதாபிமான பணியாளரின் பெயரை சூட்டியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் மனிதாபிமான பணியாளர் கைய்லா மியுல்லர் ஐஎஸ் அமைப்பிடம்   அனுபவித்த சித்திரவதைகளிற்காக பக்தாதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு கைய்லா மியுல்லர்  என்ற பெயரிட்டதாக  அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இதனை அறிந்துகொள்ளவேண்டும்,ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களிற்கும் ஏனையவர்களிற்கும் நீதி வழங்கப்பட்டுள்ளது, ஜனாதிபதி இதனையே சுட்டிக்காட்டினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த கைலா மியுல்லர் அலெப்போவில் உள்ள எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவமனைக்கு செல்வதற்காக துருக்கியை கடந்து சிரியாவிற்குள் நுழைந்தவேளை ஐஎஸ் அமைப்பினரிடம் சிக்கினார்.

அவரை 18 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐஎஸ் அமைப்பினர் 2015 இல் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை அறிவித்தனர்.

தனது மகளின் மரணத்திற்கு அல்பக்தாதியே காரணம் என கையிலா மியுல்லரின் தந்தை தெரிவித்துள்ளார்.

எனது மகளை பல சிறைகளில் வைத்திருந்தனர், தனிமைசிறைகளில் வைத்திருந்தனர்,அவர் சித்திரவதை செய்யப்பட்டார்,அச்சுறுத்தப்பட்டார் இறுதியில் பக்தாதியாலேயே அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார் என தந்தை தெரிவித்துள்ளார்.

கைய்லா மியுல்லரின் உடல் மீடகப்படாமலேயே உள்ளது.

நான் எனது மகள் எங்கிருக்கின்றாள் அவளிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிய விரும்புகின்றேன் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

யாரோ ஒருவருக்கு தெரிந்திருக்கும் யாரோ ஒருவர் விடைகளை வழங்குவார் என நான் பிரார்த்திக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நடவடிக்கையை டிரம்ப் தனது மகளிற்கு அர்ப்பணித்துள்ளதது தங்கள் மனதை தொட்டுள்ளதாக கார்ல்மியுல்லர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா டிரம்ப்போல தீர்க்கமாக செயற்பட்டிருந்தால் எனது மகள் காப்பாற்றப்பட்டிருப்பாள் என அவர் தெரிவித்துள்ளார்.