ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டது குறித்த ‘வாஷிங்டன் போஸ்ட்’ தலைப்பை சரமாரி கிண்டல்

417 0

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ஞாயிறன்று பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக முதல்நாளிலிருந்தே பீடிகை போட, கடைசியில் அது உலகை அச்சுறுத்தும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்ட செய்தியாக அமைந்தது.

அமேசான் நிறுவனர் பெசாஸ் வாங்கிய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை அல் பக்தாதி மரணம் குறித்த செய்தியில் “Abu Bakr al-Baghdadi, austere religious scholar, dies at 48″ என்று தலைப்பிட்டிருந்தது. மதக்கல்வியாளர் 48 வயதில் இறந்தார் என்ற தொனியில் தலைப்பு போடப்பட்டது கடும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளது. உலகம் அஞ்சும் பயங்கரவாதியை ‘தன் ஒழுக்கத்தில் கட்டுப்பாடான மதக் கல்வியாளர் அல் பக்தாதி’ என்று கூறியது எப்படிப் பொருந்தும்? ஆகவே தான் கடும் கிண்டல்கள் எழுந்தன. மேலும் கொல்லப்பட்டவரை ‘48 வயதில் இறந்தார்’ என்று சொல்லலாமா?

இதனையடுத்து ட்விட்டர் முழுதும் வாஷிங்டன் போஸ்ட்டைக் கிண்டல் செய்து நிறைய பகடி ட்வீட்கள் வெளிவரத்தொடங்கின. #WaPoDeathNotices என்ற ட்விட்டர் ஹாஷ்டேக் பிரபலமானது. அனைவரும் தங்களுக்கேற்ற கற்பனைக்கிணங்க, ஹிட்லர், ஒசாமா பின் லேடன் உள்ளிட்டவர்கள் பற்றி வாஷிங்டன் போஸ்ட் பாணியில் அதைக் கிண்டலடித்து ட்வீட் செய்ய தொடங்கிவிட்டனர்.

அவற்றில் சில இதோ:

காங்கிரஸ் தலைவர் சசி தரூர், இவர் கிண்டலுக்கும் கேலிக்கும் பெயர் பெற்றவர், இவர் நாதுராம் கோட்சேயைப் பற்றி வாஷிங்டன் போஸ்ட்டை பகடி செய்து வெளியிட்ட ட்வீட்டில் Nathuram Godse, eloquent defender of majority rights passes away in suspended animation at 39 என்று படு கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இன்னொரு ட்விட்டர் பதிவில் மும்பை 26/11 பயங்கரவாதி அஜ்மல் கசாப் பற்றி, “Ajmal Kasab, student, backpacker and briyani connosieur dies at 25 என்று செம கிண்டல் பதிவாகியுள்ளது.

இன்னொரு ட்வீட்டில் அடால்ஃப் ஹிட்லரை, “அர்ப்பணிப்புள்ள கலா ரசிகர், விலங்குகள் உரிமை சமூக ஆர்வலர், திறமையான் பேச்சாளர் 56 வயதில் மரணம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

இன்னொரு ட்வீட்டில் பிரபல காமெடியன் ஜோ டி விட்டோ, 23 குழந்தைகளுக்குத் தகப்பன் ஒசாமா பின்லேடன் வீட்டுப் படையெடுப்பில் கொல்லப்பட்டான் என்று ட்வீட் செய்துள்ளார்.

ஆனால் வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் பிறகு தன் தலைப்பை மாற்றி விட்டது, கிண்டல் கேலிகளினால் மாற்றியதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

“அபுபக்கர் அல் பக்தாதி தீவிரவாதத் தலைவர் 48 வயதில் மரணம்” என்று மாற்றியுள்ளது.