அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி

351 0

அர்ஜென்டினா அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் எதிர்க்கட்சியான மத்திய இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் எதிர்க்கட்சியான மத்திய இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த கட்சிக்கு 48.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. மவுரிசியோ மக்ரியின், ஆளும் கட்சி 40.4 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.

அந்த நாட்டில் 45 சதவீத வாக்குகளை பெறும் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி, மத்திய இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த கட்சியின் அதிபர் வேட்பாளரான ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், அதிபராக பொறுப்பேற்கிறார். இந்த வெற்றியை அவருடைய மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்க இருக்கும் முன்னாள் அதிபரான, கிறிஸ்டினா பெர்னாண்டசின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். நாட்டின் கொடியை கையில் ஏந்தியபடி, ‘நாங்கள் திரும்பி வருகிறோம்’, ‘நாங்கள் திரும்பி வருகிறோம்’ என்று கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.

ஆட்சி அதிகாரத்தை ஆல்பர்ட்டோவிடம் ஒப்படைக்க அதிபர் மாளிகைக்கு வருமாறு, தற்போதைய அதிபர் மவுரிசியோ மக்ரி விரைவில் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.