ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பத்தாதி கொல்லப்பட்ட பின்புலத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஒரு நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைகுறித்து அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்துவதாக பிரதமர் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளடுவிட்டர் செய்தியில் வாழ்த்து இடம்பெற்றுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி அமெரிக்க இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார்.
சிரியாவின் வடமேற்கு நகரில் அமெரிக்க இராணுவத்தினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர். அமெரிக்க இராணுவத்தினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட வேளையில் அபுபக்கர் அல் பக்தாதி தற்கொலை அங்கியொன்றை அணிந்திருந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டமை தொடர்பான அறிவிப்பை 27 ஆம் திகதி அறிவித்தார்.
அபுபக்கர் அல் பக்தாதி பயங்கரவாத அமைப்பின் தலைவராக 2010ம் ஆண்டில் சுய பிரகடனம் செய்து கொண்டார். 2014ம் ஆண்டு இவர் ஈராக்கின் மோசூல் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஆற்றிய உரை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது.
அமெரிக்க இராணுவத்தினர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் அபுபக்கர் அல் பக்தாதி காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தது.