தீபாவளி மதுவிற்பனையில் கடந்த 4 ஆண்டுகளைவிட அதிக அளவில் ரூ. 425 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.130 கோடி அதிகம்.
மதுவிற்பனை புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, தீபாவளி காலங்களில் அதிகம் இருக்கும். அதிலும் குறிப்பாகத் தீபாவளி பண்டிகையையொட்டி மூன்று நாட்கள் விற்பனை அதிகம் இருக்கும். மதுப் பழக்கத்தால் குற்றச்சம்பவங்கள், விபத்துகள், குடும்ப வன்முறைகள், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது, உடல் நலம் பாதித்து மரணம் எனப் பல விஷயங்கள் இருந்தாலும் மதுவின் மீதுள்ள மோகம் குறையவில்லை.
பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினாலும், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவுகள் போட்டாலும் எதுவும் பயனளிப்பதில்லை. பகுதி நேர மது அருந்துவோர் என்பதைத்தாண்டி தினமும் குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. குடிப்பதற்கு ஏதாவது காரணம் வேண்டும் என்கிற ரீதியில் மதுமோகம் அதிகரித்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மது விற்பனை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மொத்தமாக மது விற்பனை ரூ.425 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 25ம் தேதி ரூ.100 கோடிக்கும், தீபாவளிக்கு முதல் நாள் 26-ம் தேதி ரூ.183 கோடிக்கும், தீபாவளியன்று 27-ம் தேதி ரூ.172 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது.
இது கடந்த 3 ஆண்டுகளைவிட அதிகம். கடந்த 2016-ம் ஆண்டு 3-நாட்கள் தீபாவளி மது விற்பனை ரூ.330 கோடி ஆகும், அடுத்த ஆண்டான 2017-ல் மிகவும் குறைந்து ரூ.282 கோடிக்கு விற்பனை ஆனது. கடந்த 2018-ம் ஆண்டு மூன்று நாட்கள் விற்பனை ரூ.325 கோடி ஆகும். இதில் 2017-ம் ஆண்டுதான் கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவாக விற்பனை ஆன ஆண்டு ஆகும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் உச்சபட்ச விற்பனை அளவை மதுவிற்பனை எட்டியுள்ளது. மதுவிற்பனை கால அளவை கடைப்பிடிக்காமல் பல இடங்களில் மதுவிற்பனை அதிகாலை 3 மணி முதல் தொடங்கி நாள் முழுதும் நடப்பதும், அதிக அளவில் பார்கள், பப்கள் இயங்குவதும், மதுவின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதும் காரணமாகக் கூறலாம்.