குழந்தையை மீட்க 45 அடி பள்ளம் தோண்டப்பட்டது – பாறையை உடைப்பதில் சிக்கல்

236 0

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் கடினமான பாறையை உடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும், பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது. ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால், கடினமாக பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது சவாலாக உள்ளது.

முதலில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ரிக் இயந்திரத்தைவிட சக்தி வாய்ந்த அதாவது 350 நியூட்டன் கூடுதல் திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு வந்த அதிக எடை கொண்ட ரிக் இயந்திரத்தில் இணைப்பு கருவிகள் பொருத்தும் பணி சுமார் 3 மணி நேரம் நடந்தது.

அதன்பிறகு குழி தோண்டும் பணி நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கியது. இதற்கிடையே நேற்று காலை நடுகாட்டுப்பட்டி கொண்டு வரப்பட்ட கிணறு தோண்டும் இயந்திரம் திடீரென பழுதானது. உடனடியாக அந்த இயந்திரமும் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

புதிய இயந்திரத்தின் உதவியாலும் குழி தோண்டுவதில் சிக்கலே நீடித்து வருகிறது. இன்று காலை 6 மணியளவில் அந்த இயந்திரத்தின் தோண்டும் பகுதி பழுதானது. உடனடியாக தொழில்நுட்பக் குழுவினர் சரிசெய்து மீட்பு பணியை தொடங்கினர்.

ஆனாலும் புதிய இயந்திரத்தால் பெரிதாக குழி தோண்டமுடியவில்லை. அடிக்கடி ஏற்பட்ட சிறுசிறு பழுதுகள் சரி செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்தன. மொத்தம் 98 அடி வரை தோண்ட வேண்டும் என்று தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று நான்காவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் மதியம் 12 மணி வரையிலும் புதிய இயந்திரத்தின் மூலம் 10 அடி வரை மட்டுமே குழி தோண்டப்பட்டது. மொத்தம் இதுவரை 45 அடி குழி தோண்டப்பட்டுள்ளது. மேலும் உள்ள 53 அடிவரை குழி தோண்ட 12 மணி நேரத்திற்கும் மேலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இரண்டாவது ரிக் இயந்திரத்திலும் பழுது ஏற்பட்டது. இயந்திரத்தில் உள்ள போல்ட்டுகள் சேதமடைந்து இருப்பதால் குழி தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ரிக் இயந்திரம்

ரிக் இயந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டதால் பாறைகளை உடைக்க போர்வெல் இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று மதியம் முதல் போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளை உடைக்கும் பணி தொடங்கியது.

இதற்கிடையே இதுவரை தோண்டப்பட்ட பகுதியில் மீட்பு படை வீரர்களில் ஒருவரை இறக்கி ஆய்வு செய்யப்பட்டது.

சுமார் 70 மணி நேரத்துக்கு மேலாகியும் சிறுவனின் கதி என்ன ஆயிற்றோ? என்ற பதட்டமும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. மீட்பு பணிக்கான கிணறு தோண்டும் பணி முடிவடைய இன்னும் 10 மணி நேரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. சுர்ஜித்தை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.