பேலியகொட மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றப்பிரிவினரும் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
பேலியகொட – பட்டிசந்தி பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவினருக்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து 18 கிராம் 103 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை பேலியகொட – பராக்ரம வீதியில் குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 100 கிராம் 430 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
பேலியகொட நகரசபைக்கு அருகில் குற்றப்பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதுடைய இந்த இளைஞனிடமிருந்து 5 கிராம் 520 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்கிஸ்ஸை – இரத்மலானை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேலும் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 990 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் தொடர்பாக தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.