திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). இதில் சுஜித் வில்சன் வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்டான். ‘
சுஜித் வில்சனை மீட்க 40 மணி நேரமாக போராட்டம் நீடித்து வருகிறது.
தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் குழந்தை 100 அடி ஆழத்திற்கு சென்றது. இதனால், ஓ.என்.ஜி.சி.யின் ரிக் இயந்திரம் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த இயந்திரம், ஆழ்துளை கிணறு அருகே நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. ஆழ்துளை கிணறு அருகே பக்கவாட்டில் குழி தோண்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் குழி ஒன்று அமைக்கப்படும். அதில் இருந்து சுரங்கம் மூலம் ஆழ்துளை கிணற்றுக்குள் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆழ்துளை கிணறு அருகே அமைக்கப்படும் பக்கவாட்டு குழியில் இறங்க ராம்குமார், திலீப், தனுஷ், அபிவாணன், கண்ணதாசன் மற்றும் மணிகண்டன் என்ற 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 வீரர்களும் பாதுகாப்பு உபகரணங்களுடன் இறங்க தயாராக உள்ளனர்.
இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தொடர்ந்து 300 பேர் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இதில் 2 டெக்னிக்தான் உள்ளது, ஒன்று 4.5 சைஸில் இருக்கும் அந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தையை மீட்க நேரடியாக நம் நிபுணர்கள் மேற்கொண்ட முயற்சி. இன்னொன்று ‘போர்வெல் ரெஸ்கியூ டெக்னிக்’னு இன்னொன்று உள்ளது. இப்ப அந்த சுரங்க ட்ரில் பண்ணும் முறையைத் தொடங்கி சுமார் 20 அடி வரைக்கும் போயிருக்கிறார்கள்.
இதில் எல் அண்ட் டி, என்.எல்.சி, ஓ.என்.ஜி.சி, உள்ளிட்டோர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து 300 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இடர்கள், விபத்துகள் ஏற்படும் போது நாம் எதையும் உத்தரவாதமாக சொல்ல முடியாது. மேலும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றனர், அதே போல் மருத்துவக் குழுவும் சம்பவ இடத்தில் உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.