வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் அகப்பட்டுள்ள காங்சேசன்துறை பகுதயளவில் விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இராணுவத்தினர் விடுவிக்காமல் தொடர்ந்தும் தமது பயன்பாட்டிற்காக கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
இவ்வாறு கையகப்படுத்தி வைத்துள்ள குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கில் அதனைச் சூழ நிரந்தரமான முட்கம்பி வேலிகளை அமைக்கும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து அண்மையில் 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியில் காங்சேசன்துறை பகுதியில் மட்டும் 63 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.
குறித்த காணிகளுக்குள் காங்கேசன்துறை வீதிக்கு அருகில் உள்ள் தெல்லிப்பளை எம்.பி.சி.எஸ் இன் எரிபொருள் நிரப்பு நிலையமும் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்பட்டிருந்தது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இதுவரை காலமும் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்திருந்தனர்.
இருப்பினும் குறித்த பகுதி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை விட்டு இராணுவத்தினர் வெளியேறவில்லை. தொடர்ந்தும் அதனை தமது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்துள்ளனர்.
தமது கட்டுப்பாட்டின் கீழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை வைத்துள்ள இராணுவத்தினர் அவ் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை நிரந்தரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்தில் அதனைச் சூழ முற்பம்பிகளால் நிரந்தர பாதுகாப்பு வேலிகளையும் தற்போது அமைத்து வருகின்றனர்.
உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வைக்குள் கடந்த 26 வருடங்களாக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகள் தற்போது பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு விடுவிக்கப்படும் சிறிய அளவிலான காணிகளிலும் உள்ள பொது மக்களின் பயன்பாட்டிற்கு உரியவற்றினை இராணுவத்தினர் தம்வசம் வைத்துள்ளதால் விடுவித்த பகுதிகளின் மீள்குடியேற்றம் கூட முழமையடைநாத நிலையிலேயே காணப்படுவதாகவும் வலி.வடக்கு வாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.