யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் காவல்துறையினரை வெளிமாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்துகொண்டு செல்லுமாறு பிரபாகரன் படை என்ற பெயரில் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது.
இத்துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாண நகரத்தின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில், தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற 21நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவித்திருப்பதாவது,
வடக்கில் தொடரும் போதைப் பொருள் விநியோகம், பாவணை மற்றும் சிங்கள, பௌத்த மயமாக்கல் தொடர்பிலும் தமது கரிசணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழர்கள் வாழும் பூவீகப் பிரதேசமான வடமாகாணத்தின் மண்ணும் எமது கலசாரமும் தனித்துவமானவை என்றும், அவை இன்று சிங்கள காடையர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன என்றும் ” பிரபாகரன் படை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர் சமுதாயம் சாராயம் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும். இவை சிங்கள அரசால் மேற்காள்ளப்பட்டுவரும் ஒரு திட்டமிட்ட செயலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புத்தர் சிலைகள அமைப்பதும் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் எம் இனத்தை சினங் கொள்ள வைக்கும் செயலாக பார்க்கப்படுவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் 10 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் சிங்கள பெரும் பிரதேசமாக மாற்றம் கண்டுவிடுமளவிற்கு சிங்களவாதிகளின் போக்குகள் மிகக்கடுமையாகவும், கீழ்தரமாகவும் இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை தம்மை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாசறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளப்படுத்திக்கொண்டுள்ள ”பிரபாகரன் படை” என்ற இந்தக் குழு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களது உரிமை போராட்டம் தவிரிந்த கோரிக்கைகள் தவிர்த்து அடாத்தான போராட்டங்களை செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், விலைமதிக்க முடியாத அரும்பெரும் சொத்துக்களான பல்கலைக்கழக மாணவர்களை திட்டமிட்டு அழிப்பதற்கு சிங்கள அரசு செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் உட்பட தமிழ் அரசியல்வாதிகள், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை, அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து இடை விலகிக் கொள்ள வேண்டும் அல்லது, இராஜினாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் காரியாலயம், பொலிஸ் நிலையங்களில் கடமை புரிகின்ற அனைத்து தமிழ் உறவுகளும், தங்களது கடமைகளை இன்னுமொரு பிரதேசத்திற்கு மாற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ள ”பிரபாகரன் படை”, இதற்காக 21 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
யாழ் குடாநாட்டில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவம் தொடர்ந்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை முழமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழர் தரப்பினரால் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுவரும் நிலையிலேயே யாழ் குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களும், பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்களும் முளைத்திருக்கின்றன.
குறிப்பாக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ் மக்களால் வருடாநாதம் ஊலகம் முழுவதும் அனுட்டித்துவரும் மாவீரர் மாதம் ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையிலேயே இந்த பிரபாரகன் படை என்ற பெயரில், தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது போன்று ஒரு துண்டுப் பிரசுரம் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டிருப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.