ஈரானில் கடந்த ஆண்டில் 7 சிறார்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஐநா

292 0

ஈரானில் கடந்த ஆண்டில் 7 சிறார்கள் தூக்கிலிடப்பட்டனர் என்று ஐநாவின் மனித உரிமை அமைப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

18 வயதுக்குட்டப்பட்ட சிறார்களுக்கு மரண தண்டனை வழங்குவது சர்வதேச மனித உரிமை சட்டத்தால் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஈரான், கடந்த ஆண்டு 7 சிறார்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது.

இச்செய்தியை ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் மனித உரிமை விசாரணையாளர் ரஹ்மான், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் தெரிவித்தார்.

மேலும் ரஹ்மான், “ இது நம்பகமான தகவல். ஈரானில் தற்போது சுமார் 90 சிறார்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். உலக நாடுகளில் ஈரானில்தான் மரண தண்டனைகள் அதிகமாக நிறைவேற்றப்படுகின்றன” என்றார்.

ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகங்கள் கண்டுகொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக, ஈரானில் கால்பந்தாட்டத்தைப் பார்க்கச் சென்ற சாஹர் என்ற பெண் கைது செய்யப்பட்டார். இதில் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தின் முன் தீக்குளித்து மரணம் அடைந்தார்.

இந்தச் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சர்வதேச கால்பந்து அமைப்பு ஈரானுக்கு எச்சரிக்கையும் விடுத்தது. இதனைத் தொடர்ந்து ஈரானில் கால்பந்தாட்ட போட்டிகளைக் காண பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.