ஈரானுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் மட்டுமே அந்நாட்டைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்யும் என்று சவுதி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி தரப்பில், “ ஈரானைத் திருப்திப்படுத்துவது வேலை செய்யாது என்று நினைக்கிறோம். செயலின் மூலம்தான் காட்ட வேண்டும். வெறும் சொல்லால் அல்ல. ஈரானுக்கு அளிக்கும் அதிகப்படியான அழுத்தம் மட்டுமே அந்நாட்டைப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதியும் அமெரிக்காவும் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் – சவுதி இடையே பதற்றம் நீடிக்கிறது.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் அதிபர் ஹசனையும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்க பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில் பேச்சு வார்த்தையில் பங்கேற்க வேண்டுமெனில் தங்கள் மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.