போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த லெபனான் அதிபர்

290 0

அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் லெபனான் அதிபர்.

லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி , ஊழல் காரணமாக அரசை எதிர்த்து போராட்டக்காரர்கள் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் சாத் அல் ஹரிரி 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் விவாதக் கூட்டத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

லெபனானில் நிலவும் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து போராட்டக்காரர்கள் சாலை மறியல், டயர்களை எரித்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் செவ்வாய்க்கிழமை தலைநகர் பெய்ரூட்டில் போராட்டக்காரர்கள் தங்கள் முகத்தில் வித்தியாசமான ஒப்பனைகளைச் செய்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் லெபனானில் அதிகரித்து வரும் நிலையில் போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் லெபனான் அதிபர் மிச்செல் அவுன்.

இதுகுறித்து தொலைக்காட்சியில் மிச்செல் அவுன் பேசும்போது, ”நிச்சயமாக ஊழலுக்கு எதிராக லெபனான் அரசு சண்டையிடும். தற்போதுள்ள அரசை பற்றிய மதிப்பீடு தேவைப்படுகிறது. ஊழலை எதிர்த்து வரும் புதிய சட்டங்களுக்கு நிச்சயம் ஆதரவு அளிக்கப்படும். உங்கள் போராட்டம் நிச்சயம் வீணாகாது. போராட்டக்காரர்களே உங்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க தயாராக இருக்கிறேன். உங்கள் வேண்டுகோளைக் கேட்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.