விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.
நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தி ஆகியோர் பின்தங்கினர். காலையில் வாக்கு வித்தியாசம் 2 ஆயிரம் வாக்குகள் என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர் அதிமுகவின் வாக்குகள் மேலும் அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் ஒரு லட்சத்தை தாண்டியது. திமுக வேட்பாளர் 66 ஆயிரம் என்ற நிலையில் இருந்தார். வாக்கு வித்தியாசம் 40 ஆயிரத்தை தாண்டியது.
மதியம் ஒரு மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.