கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று!

243 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

இன்று(புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் ஐந்தும் தற்போது தமது நகர்வுகளை முன்னெடுக்க தயாராகி வருகின்றன.

இதற்கமைய இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய ஐந்து கட்சிகளும் இந்த வார இறுதிக்குள் கூடி பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்டமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

இதற்கிடையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள நகர்வுகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

அத்துடன், வெள்ளிக்கிழமைக்கு முன்னர் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து தமது இறுதி நிலைப்பாடு குறித்து ஆராயவுள்ளதாக கூறப்படுகின்றது.