ஆபத்தானப் படகுப் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோர முற்படுபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படும் ஒருவர், சுற்றுலாப் பயணியாகவோ, வியாபார வீசா மூலமோ அல்லது அவுஸ்திரேலிய பிரஜையொருவரை திருமணம் செய்தோ அவுஸ்திரேலியாவுக்கு வருவதை முழுமையாகத் தடுக்கும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆபத்தானப் படகுப் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அரசியல் தஞ்சக் கோரிகளை அந்நாட்டு அரசாங்கம் நாட்டுக்குள் எடுக்காது நாரூ மற்றும் பப்புவா நிவ் கினியாவின் மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகள் தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைத்திருக்கின்றது.
எனினும் அந்த அகதிகள் தடுப்பு முகாம்களில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அகதிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் சம்பவங்களால் அவுஸ்திரேலிய அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையிலேயே படகு அகதிகளின் வருகையை முற்றாகத் தடுக்கும் நோக்கில் பிரதமர் மெல்கம் டேர்புல் தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம், படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் வரும் அகதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் அவுஸ்திரேலியாவிற்கு நுழைய முடியாதவாறு தடை விதிக்கும் கடுமையான சட்டத்தை அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளது.