தங்க பிஸ்கட், ஆபரணங்களுடன் விமான நிலைய ஊழியர் கைது

250 0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சட்ட விரோதமாக 4 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் ஆபரணங்களை கடத்த முற்பட்ட விமான நிலைய ஊழியர் ஒருவர் இன்று சுங்க திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 கோடியே 10 இலட்சம் பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்கள் , தங்க ஆபரணங்களை சட்ட விரோதமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்ல முயற்சித்த ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் விமான நிலையத்தின் மின் இயந்திரங்கள் பழுது பார்க்கும் பிரிவில் பணிபுரியும் 26 வயதுடைய வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் இதற்கு முன்னரும் இரு தடவைகள் இவ்வாறு சட்ட விரோதமாக தங்கம் கொண்டு செல்ல முயற்சித்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் தனது முழங்காலுக்கு கீழ் பகுதியில் தங்கத்தை 5 பொதிகளாக மறைத்து கொண்டு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது 100 கிராம் எடையுடைய 40 தங்க பிஸ்கட்டுக்களும், 1 கிலோ 400 கிராம் எடையுடைய தங்க ஆபரணங்களும் குறித்த சந்தேகபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரயாணி ஒருவரிடமிருந்து இவ்வாறு ஆபரணங்களை எடுத்து செல்லுமாறு கோரப்பட்டதாகவும், இதனுடன் டுபாய் நாட்டைச் சேர்ந்த வியாபாரியொருவரும் தொடர்புபட்டுள்ளதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.