சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கு குடியரசுத் தலைவர், முதல்வர் பதக்கம்: நாளை நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குகிறார்!

203 0

சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வர் பதக்கங்களை நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், தமிழக முதலமைச் சரின் பதக்கங்கள் ஆண்டு தோறும் போலீஸாருக்கு வழங் கப்படுகின்றன. இந்த ஆண்டுக் கான பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (அக்.23) நடக்கிறது.

முதல்வர் பழனிசாமி இந்த விழாவில் கலந்து கொண்டு பதக்கங்களை வழங்குகிறார். அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கும் இந்த விழாவில் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. விழாவில் பங்கேற்க வரும் முதல்வருக்கு காவல் துறையினர் சார்பில் சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.

 

இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் சென்னை ஆயுதப்படை கூடுதல் காவல் துறை இயக்குநர் ஷங்கர் ஜிவால், கோவை காவலர் பயிற்சி பள்ளி உதவி ஆய்வாளர் கே.சபரிநாதன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. மேலும், இந்திய குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்கப் பணிக்கான விருதுகள் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 21 பேருக்கு வழங்கப்படுகிறது.

பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் செ.சைலேந்திரபாபு, நிர்வாகப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் ப.கந்தசுவாமி, சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் முனைவர் இரா.தினகரன், சேலம் மாநகர காவல் ஆய்வாளர் ஜா.நாகராஜன், தஞ்சை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சி.செந்தில்குமார், சென்னை மனநிலை காப்பக காவல் நிலையம் தலைமைக் காவலர் சா.டெய்சி ஆகிய 6 பேர் உட்பட 16 பேருக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

டிஜிபி ஜே.கே.திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உட்பட காவல் துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்