பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் ஈரமான ஓட்டப்பாதையால் மாணவர்கள் பாதிப்பு!

226 0

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் நடத்தப்பட்டதால், பல மாணவர்கள் மைதானத்தில் வழுக்கி விழுந்து, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததாக புகார் எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்டம், மண்டலம், கோட்டம், மாநிலம் என்ற அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மண்டல அளவிலும், அதன்பின் கோட்ட அளவிலும் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

கோட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் இருந்து ஒரு போட்டிக்கு 3 மாணவர்கள் வீதம் ஒவ்வொரு கோட்டத்தில் இருந்தும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன்பின் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

 

இந்நிலையில், நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில், சென்னை கோட்ட அளவிலான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. முன்ன தாக நேற்று காலை மழை பெய்திருந்ததால், தடகள போட்டிக்கான ஓட்டப்பாதை ஈரமாக இருந்தது. எனவே, மழை நேரத்தில் போட்டிகளை நடத்த வேண்டாம் என்று ஆசிரியர்கள் தரப் பில் சம்பந்தப்பட்ட மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரிடம் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நேரமின்மை கருதி மழை நின்ற தும் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 3,000 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 600 மீட்டர் தடை ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டதில், சில மாணவிகள் வழுக்கி விழுந்துள்ளனர். இதனால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘மழை இல்லாத நேரத்தில் போட்டி நடத்தியிருக்கலாம். மாணவர்களில் பலர் வழுக்கி விழுந்ததால் அவர்களுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால், முதலிட வாய்ப்பை பலர் நழுவ விட்டுள்ளனர். இது அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை பாதிப்பதாக அமைந்துவிட்டது’’ என்றனர்.

விரைவில் தேர்வுகள்

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘இந்த மாதத்துக்குள் போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. புதிய பாடத் திட்டத்தின்கீழ் தற்போது ஆசிரியர்கள் கற்பித்து வருவதால், போதிய நேரம் கிடைப்பதில்லை. விரைவில் தேர்வு நடக்க உள்ளது. அந்த நேரத்தில் விளை யாட்டு போட்டிகளை நடத்தினால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும். நேரு விளையாட்டரங்கில் நடந்த போட்டியில் ஒரு சில மாணவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளிடம், விளையாட்டரங்க ஓட்டப்பாதை குறித்து கேட்டபோது,‘‘ சர்வதேச தரத்தில் சிந்தடிக் ஓடுதளம்தான் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மழைநீர் இருந்தாலும் வழுக்கி விழ வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தனர்.