தமிழீழ ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் அவர்கள் கடந்த 22 ஆம் திகதி காலமாகிவிட்டார் என்ற செய்தி எம்மை மீழாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
உலகெங்கும் பரவிவாழ்ந்து வரும் தமிழர்களிடையே மறக்கப்பட்டு வந்த தமிழ் மொழியையும், தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களையும் மீட்டெடுக்க வேண்டுமென்ற இரா.கனகரட்ணம் அவர்களின் தணியாத தாகத்தின் வெளிப்பாடாக 1974 இல் தோற்றம் பெற்றதே உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமாகும். அதன் ஆரம்பகர்த்தாவாக விளங்கியதுடன் செயலாளர் நாயகமாகவும் திகழ்ந்து வந்திருந்தார்.
அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு போர் ஓய்வு நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் தனது அயராத முயற்சியால் சேகரித்து வைத்திருந்த வரலாற்று ஆவணங்களை நிரந்தரமாக பாதுகாக்கும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க விரும்பி அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களை நாடியிருந்தார் இரா.கனகரட்ணம் அவர்கள்.
மூன்று பார ஊர்திகள் நிறைந்த ஆவணங்களை கண்டியில் இருந்து கிளிநொச்சிக்கு எடுத்துவந்த இரா.கனகரட்ணம் அவர்களின் பணியின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ ஆவணக்காப்பகத்தை உருவாக்கியதுடன் அதன் பொறுப்பாளராகவும் அவரையே நியமித்து மதிப்பளித்திருந்தார்.
தமிழீழ அரசியற் பிரிவிற்கு கீழ் செயல்பட்டுவந்த தமிழீழ ஆவணக்காப்பகத்தினை இரா.கனகரட்ணம் அவர்கள் திறம்பட வழிநடத்திவந்த நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இன அழிப்பு போர்மேகங்கள் வன்னியை ஆக்கிரமித்து தீவிரம் பெற்றது.
இந்நிலையில்தான் 2008 ஜூன் மாதத்தின் ஒரு நாளில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் இரா.கனகரட்ணம் அவர்கள் ஒழுங்கு செய்யப்பட்ட தனியிடத்திற்கு அழைக்கப்பட்டு அவரது பணிகளை பாராட்டியதுடன் சிலகாலம் பாதுகாப்பாக வெளியே இருக்குமாறு கூறி மதிப்பளித்து வழியனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் தங்கியிருந்த போதும் தனது ஆவணக்காப்பு பணியை தொய்வின்றி மேற்கொண்டு வந்திருந்தமை அப்பணியை எந்தளவிற்கு அவர் நேசித்துள்ளார் என்பதை உணர்த்துகின்றது. முதுமையின் வரப்பிரசாதமாக ஏற்பட்ட நோய்களையும் உடற் சோர்வுகளையும் மனச்சிதைவுகளையும் வென்று ஓய்வு ஒழிச்சல் இன்றி இவர் ஆற்றியுள்ள வரலாற்றுப் பணியானது நிறுவனமயப்படுத்தப்பட்ட பணிகளையும் விஞ்சி நிற்கின்றது.
1890 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரையான சேகரிப்புக்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் நுண்படச்சுருள் (மைக்ரோ பிலிம்) வடிவில் பாதுகாத்து வருங்கால தலைமுறைகளுக்கு உவந்தளித்துச் சென்றுள்ள பணி எவராலும் எக்காலத்திலும் இட்டு நிரப்ப முடியாத பெரும் பணியாகும். அந்தவகையில் குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் அவர்களின் இழப்பானது இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாகும்.
தமிழனத்தின் விடுதலையை நேசித்ததோடு உலகத் தமிழின வரலாற்றின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த இரா.கனகரட்ணம் அவர்களின் ஆத்மா அமைதிபெற வேண்டுவதுடன், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல்களையும் தேறுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.