போருக்கான உத்தரவை தாம் விடுத்தபோது ஸ்ரீலங்கா இராணுவம் போரை மட்டுமே மேற்கொண்டது. மாறாக யுத்தகுற்றத்தை ஒருபோதும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஸ்ரீலங்கா இராணுவத்தின் போராட்டத்தை திரிபுபடுத்தி சர்வதேசத்தின் உதவியுடன் படையினரை போர்க் குற்றவாளிகளாக்கும் கைங்கரியத்தில் மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் கெரி டி சில்வா எழுதிய மோதலில் கொல்லப்பட்ட போர் வீரர்கள் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு கொழுமபிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் தயான் ஜயதிலக உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,
‘எமது நாடு மிகச்சிறிய நாடாக இருந்தாலும் இங்கு நடந்த யுத்தம் உலகத்தையே உலுக்கிய போராகும். அதனை மறந்துவிட வேண்டாம். இன்று அந்த போராட்டத்தை திரிபுபடுத்தி காண்பிக்க முயற்சிக்கின்றனர். படைவீரர்களை இன்று குற்றவாளிகளாக்க முயற்சிக்கின்றனர். அதற்கு வெளிநாட்டவர்களைப் பயன்படுத்தி வழக்கு தொடர முயற்சிக்கின்றனர்.
அது நல்லிணக்கத்தைப் பாதிக்கும். அந்த வெற்றியை கொண்டாடுவதும் நல்லிணக்கத்திற்குப் பிரச்சினை. கடற்படை அதிகாரிகளை அடித்து இழுத்துச்சென்று சிறைவைத்திருக்கும்போது அவர்களை அடைத்துவைத்தவர்களை தண்டிப்பதும் நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு. பொலிஸ் அதிகாரிகளை தாக்கியவர்களையும், வெட்டியவர்களையும் தண்டிப்பது நல்லிணக்கத்திற்குப் பிரச்சினையாகும்.
எனினும் இந்த நாட்டை மீட்டெடுத்த உங்களுக்கும், எனக்கும்? எதிர்கால சந்ததியினருக்கும் வீதியில் நடந்துசெல்லவும், வாழ்க்கையை நடத்தவும் சூழலை ஏற்படுத்திய படையினர் செய்த செயற்பாடுகளை குற்றங்களாக தீர்மானிப்பதற்கான சமூகமும், நாடும், தலைமைத்துவமும் இப்போது உள்ளது.இதுகுறித்து கவலையடைகின்றேன்.
எமது இராணுவம் மிகவும் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் படை என்பது எமக்குத் தெரியும். போர் செய்வதற்கு உத்தரவிட்டபோது அவர்கள் யுத்தம் செய்தனர். மனிதாபிமான செயற்பாட்டினையே அவர்கள் செய்தனர் என்பதை தைரியமாகக் கூறுகின்றோம். அவர்கள் போர்க் குற்றவாளிகள் அல்லர். அவர்கள் உண்மையாகவே பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை மீட்டெடுத்தனர். அதற்கு கைமாறாக நாம் செய்யவேண்டியது அவர்களை சிறைதள்ளுவது அல்ல. விடுதலைப் புலிகளுக்கு நட்டஈடு வழங்கும் சந்தர்ப்பத்தில் உயிர்நீத்த இராணுவத்தினரின் மனைவிக்கு நட்டஈடு இல்லை. இதுவே இன்றைய சமூகம்.
இதுவே இன்றைய அவல நிலை- எமது நாட்டில் 1995ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டுவரை மிகவும் பயங்கரமான சூழலே இராணுவத்தினர் மிகவும் கடினமான சூழ்நிலையிலேயே போரில் ஈடுபட்டிருந்தனர். எமது அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே நாடு முழுவதிலும் யுத்தத்திற்கு இராணுவத்தினரின் தைரியம் வீழ்ந்துபோகும் வகையில் தவலம, வெண்தாமரை போராட்டங்களை எதற்காக செய்தார்கள் என்பது குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எமது இராணுவம் எப்பொழுதும் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொண்ட யுத்தமல்ல, மாறாக பயங்கரவாதத்திற்கு எதிராக செய்த போர் என்றே நான் நம்புகின்றேன்’ என்று மேலும் தெரிவித்தார்.