தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது!

242 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை முழுமையாக சுயாதீனமானது என்று ஒருபோதும்  ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீறிஸ் தெரிவித்தார்.

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாயர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு  நாளைமறுதினம்  பாராளுமன்றில் அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளது.

இந்த அறிக்கை முழுமையாக சுயாதீனமானது என்று ஒருபோதும்  ஏற்றுக் கொள்ள முடியாது. பயங்கரவாதி  சஹ்ரானுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பு  கொண்டுள்ளார்கள் என்று ஆளும் தரப்பினராலும், எதிர்தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குழுவின் அங்கத்துவம் வகித்துள்ளார்கள்.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களையும், குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கிலே பாராளுமன்ற தெரிவு குழு  நியமிக்கப்பட்டது.

இவ்வறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. குண்டுத்தாக்குதல் குறித்த முழுமையான  பக்கச்சார்ப்பற்ற விசாரணைகள்  ஏதும்  இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

எமது அரசாங்கத்தில் சுயாதீன விசாரணை ஆணைக்குழு அமைத்து  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு ஒரு இனத்திற்கு மாத்திரம் அல்லாமல் அனைத்த இனங்களுக்காகவும் பலப்படுத்தப்படும்.

போர் வெற்றியினை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாது என்று தேர்தல்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளமையினை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே யுத்த வெற்றியை பிரச்சாரம் செய்வதால் எவ்வித சட்ட சிக்கலும் ஏற்படாது என்றும் கூறினார்.