நாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

302 0

தேர்தல் நடத்தை விதியை மீறி எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்தும் தனக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யும் வகையில் தொலைக்காட்சியில் பேட்டி அளித்த நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இன்று நாங்குநேரி தொகுதியில் வாக்களித்த பின் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அதிமுக வேட்பாளர் நாராயணன், ”நான் இங்கு என் குடும்பத்துடன் வாக்களித்தேன். எனக்கு இங்கு வாக்கு உள்ளது.

நான் இங்கேயே வசிக்கிறேன், ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இங்கு வாக்களிக்கவில்லை, அவருக்கு இங்கு வாக்கு இல்லை. அவர் இங்கு வசிக்கவும் இல்லை. இங்கே தொகுதியில் வசிக்காதவர் எப்படி தொகுதிக்காக உழைக்கப் போகிறார்?” என பேட்டி அளித்திருந்தார்.

 

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவைச் சந்தித்து நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் மீது புகார் ஒன்றை அளித்தனர்.

அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது:

”அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வாக்களித்த பின் வாக்குச்சாவடிக்கு வெளியே பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டி முற்றிலும் அவருக்குப் பிரச்சாரம் செய்யும் வகையில், மினி பிரச்சாரம் செய்துள்ளார். அது தேர்தல் நடத்தை விதிக்கு புறம்பானது.

அவரது பேட்டியில், “நான் இங்கு என் குடும்பத்துடன் வாக்களித்தேன். எனக்கு இங்கு வாக்கு உள்ளது.
நான் இங்கேயே வசிக்கிறேன், ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இங்கு வாக்களிக்கவில்லை, அவருக்கு இங்கு வாக்கு இல்லை. அவர் இங்கு வசிக்கவும் இல்லை. இங்கே தொகுதியில் வசிக்காதவர் எப்படி தொகுதிக்காக உழைக்கப் போகிறார்” என பேட்டி அளித்துள்ளார்.

மீடியாக்கள் மூலமாக மினி பிரச்சாரம் செய்வது என்பது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். வாக்குச்சாவடிக்குள் தடை செய்யப்பட்ட காலத்தில் பேட்டி அளித்ததன் மூலம் வாக்காளர்கள் மனதில் தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முகாந்திரம் உள்ளது.

தேர்தல் ஆணையம் உடனடியாக அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.