ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா வெளியேற்றம்

334 0

201610301042241287_russia-voted-out-of-un-human-rights-council_secvpfசிரியாவில் உள்நாட்டுப் போரை ஊக்குவித்து வருவதால் ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை ஐ.நா. உறுப்பு நாடுகள் வெளியேற்றியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 47 நாடுகளில் 14 நாடுகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைவதால் இவ்வமைப்பின் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் ரகசிய வாக்குப்பதிவு நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை தலைமை நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். பிரேசில், சீனா, குரோஷியா, கியூபா, எகிப்து, ஹங்கேரி. ஈராக், ஜப்பான், ருவான்டா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துனிசியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த தேர்தலில் வெற்றிபெற்று, 1-1-2017 முதல் செயல்படவுள்ள மனித உரிமை கவுன்சிலில் இடம்பிடித்துள்ளன.

இந்த அமைப்பில் மீண்டும் இடம்பெறுவதற்காக ரஷியாவும் போட்டியிட்டது. கிழக்கு ஐரோப்பா கண்டத்தின் சார்பில் இடம்பெறுவதற்கான இரண்டு இருக்கைகளுக்காக ரஷியாவை எதிர்த்து  குரோஷியாவும், ஹங்கேரியும் போட்டியிட்டன. இதில் ஹங்கேரிக்கு 144 ஓட்டுகளும், குரோஷியாவுக்கு 114 ஓட்டுகளும் கிடைத்தன.

இதனால், 112 ஓட்டுகளை பெற்ற ரஷியா, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபருக்கு ஆதரவாக உள்நாட்டுப் போரை ஊக்குவித்து வருவதால் ரஷியாவை ஆதரித்து பிறநாடுகள் வாக்களிக்கவில்லை என கருதப்படும் நிலையில், ஐ.நா.சபையின் மனித உரிமை கண்காணிப்பக இயக்குனர் லூயிஸ் சார்பேன்னேவ், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனித உரிமை கவுன்சிலில் இடம்பெறுவதற்கான ரஷியாவின் முயற்சியை புறக்கணித்ததன் மூலம் சிரியாவில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவரும் ஆட்சியை ஆதரிக்கும் ரஷியாவுக்கு ஐ.நா.சபையின் உறுப்பு நாடுகள் சரியான பாடம் கற்பித்துள்ளன’ என குறிப்பிட்டுள்ளார்.