வீட்டின் அருகே வெடி குண்டுகளை பதுக்கி அதன்மூலம் செர்பியா பிரதமரை கொல்ல சதி நடந்தது.
செர்பியா நாட்டின் பிரதமராக அலெக்சாண்டர் வியூசிக் இருந்து வருகிறார். இவரது குடும்ப வீடு தலைநகர் பெல்கிரேடில் உள்ளது.
இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே ஒரு ‘டிரங்க்‘ பெட்டியில் வெடிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், டாங்கியை தகர்க்கும் ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள், கடற்படையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்டவை இருந்தன. அவை அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டன.
இந்த தகவலை செர்பியா உள்துறை மந்திரி நெபோஜ்கா ஸ்டேபானேவிக் தெரிவித்தார். மறைத்து வைத்திருந்த இந்த குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை பயன்படுத்தி பிரதமர் அலெக்சாண்டர் வியூசிக்கை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
வெடிகுண்டுகள் அகற்றப்பட்டதன் மூலம் அவரை கொல்ல நடந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சதி தற்போது முதன் முறையாக நடைபெறவில்லை. மேலும் பிரதமர் அலெக்சாண்டர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மாற்று இடத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இவரை கொல்ல தற்போது நடந்த சதி முதன் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்று நடந்துள்ளது என்றும் உள்துறை மந்திரி கூறினார்.