பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனான் நாட்டில் வரி வருவாயை பெருக்கும் நோக்கத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றிக்கு வரி விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
ஒவ்வொரு அழைப்புக்கும் 0.20 டாலர் (சுமார் ரூ.14) வரி விதிப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.
இதைக் கேட்டதும் அந்த நாட்டு மக்கள் கொதித்தெழுந்தனர். கடந்த 2 நாட்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி அரசாங்கம் பதவி விலகக்கோரி கோஷங்களை முழங்கினார்கள். சாலைகளில் டயர்களை கொளுத்திப்போட்டார்கள்.
பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்கிற அளவுக்கு நிலைமை மோசமானது. இந்த மோதல்களில் பலர் படுகாயம் அடைந்தனர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த அரசு அடிபணிந்தது. வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம் அழைப்புகளுக்கு விதித்த வரி விதிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
ஆனாலும் போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. எல்லா மக்களுக்கும் உணவு, எரிபொருள், மற்ற அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும், இல்லையேல் பதவி விலக வேண்டும் என்று மக்கள் முழங்கி வருகின்றனர். பிரதமர் சாத் அல் ஹரிரி அரசு என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது