கோட்டாபயவின் அண்மைய நடவடிக்கையினால் சஜித்தின் வெற்றி உறுதியாகியுள்ளது- ரஞ்சன்

238 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரின் அண்மைய நடவடிக்கையினால், சஜித் பிரேமதாஸவுக்கான வெற்றி உறுதியாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ரஞ்சன் ராமநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு இன்று அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவுகள் வந்துக்கொண்டிருக்கின்றன.

இதனால், சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. எதிர்தரப்பு வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று மக்களின் கேள்விக்கு பதில் வழங்க முடியாதுபோயுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்காமல், சிரித்து சமாளித்து விடுவதைதான் நாம் அவதானித்தோம்.

இதுபோன்று இன்னும் இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தினால், அவரின் உண்மையான முகம் முழுமையாக வெளிவந்துவிடும்.

சஜித் பிரேமதாஸவும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன்தான். எனினும், அவரிடம் உள்ள எளிமை மஹிந்தவிடமோ அல்லது அவரது புதல்வர்களுக்கோ உள்ளதா? இல்லை.

கோட்டாபய ராஜபக்ஷ, இன்று இராணுவத்தை பாதுகாப்பதாகக் கூறிவருகிறார். ஆனால், யுத்தத்தையே முடிவுக்குக் கொண்டுவந்த பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவை இவர்கள்தான் இரண்டரை வருடங்களுக்கு மேல் சிறையில் வைத்தார்கள் என்பதை, யாரும் மறந்து விடக்கூடாது.

அத்தோடு, இவர்களால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கொலைகளையும் நாம் மறக்கவில்லை. குறிப்பாக வசிம் தாஜுடீனை கொலை செய்தார்கள். இதற்கான விசாரணையைக் கூட நாம் எமது காலத்தில்தான் மேற்கொண்டோம்.

வசிம் தாஜுடீன் நாமல் ராஜபக்ஷவின் நண்பர் என்றால், ஏன் அவர்கள் அப்போதே இதன் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை?

இவர்கள் அவரை கொலை செய்திருக்கா விட்டால், விசாரணைகளை அன்றே நடத்தியிருக்கலாம் தானே?

இதுபோன்று, கோட்டா உள்ளிட்ட தரப்பினர் கடந்த காலங்களில் மேற்கொண்ட எந்தவொரு செயற்பாட்டையும் நாம் மறக்கவில்லை.

எனவே, அனைத்து மக்களும் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள். இதனை அனைவரும் நவம்பர் 17 ஆம் திகதி தெரிந்துக்கொள்ள முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.