இம்ரான் கான் பதவி விலக கோரி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: பில்வால் பூட்டோ அறிவிப்பு

392 0

நாட்டில் உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக நாடு தழுவிய அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பில்வால் பூட்டோ சர்தாரி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் 1977ல் ராணுவ சட்ட நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்ட பாக். மக்கள் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஜூல்பிகார் அலி பூட்டோவின் குடும்பத்தில் கிட்டத்தட்ட அனைவரும் அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.

அவரது மகள் பெனாசிர் பூட்டோ பிரதமராகவும் கணவர் சர்தாரி நாட்டின் அதிபராகவும் பதவி வகித்தவர்கள். தற்போது பெனாசிர் சர்தாரி வாரிசான பில்வால் பாகிஸ்தான் எதிர்க்காட்சியான பாக்.மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார். இம்ரான் கானை தொடர்ந்து எதிர்த்துவரும் இளம்தலைவரான பில்வாலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.

நேற்றிரவு கராச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பில்வால் பூட்டோ – சர்தாரி பங்கேற்று பேசியதாவது:

”பாகிஸ்தானில் நடந்துகொண்டிருப்பது உண்மையான ஜனநாயக ஆட்சி இல்லை. இந்த செயற்கை ஜனநாயகத்தை நாங்கள் ஏற்கவில்லை.. மக்களின் ஜனநாயக மற்றும் சமூக-பொருளாதார உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்… அதற்காக (பிரதமர்) இம்ரான் கான் ராஜினாமா செய்ய வேண்டும்.

எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாததால், தற்போதைய அரசாங்கம் மக்களிடையே அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. கான் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தானில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

இந்த நமது அரசு எதிர்ப்பு இயக்கம் இன்று கராச்சியில் இருந்து தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இனி நாடு தழுவிய அளவில் தொடர் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும். முதல் கட்டமாக அக்டோபர் 23 அன்று தார் நகரத்திலும் 26 அன்று காஷ்மோர் நகரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அடுத்ததாக நவம்பர் 1 முதல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நாங்கள் முழு நாட்டிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வோம், நாங்கள் காஷ்மீரில் இருந்து திரும்பும்போது, நீங்கள் (கான்) செல்ல வேண்டியிருக்கும். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உங்கள் திறமையின்மையை நாங்கள் அம்பலப்படுத்துவோம்.

200 மில்லியன் மக்கள் வாழும் ஒரு நாட்டை ஆளக்கூடிய திறனும் தீவிரமும் இம்ரான் கானுக்கும் இல்லை. நாடாளுமன்றம் ஓரமாக ஒதுக்கப்பட்டுவிட்டது. அரசியல்வாதிகள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.”

இவ்வாறு கராச்சிக் கூட்டத்தில் பில்வால் தெரிவித்தார்.