ரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார்- கே.எஸ்.அழகிரி

305 0

15 ஆண்டுகள் ராணுவ வீரராக பணிபுரிந்து நாட்டை காத்த ரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிராக நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் கவனத்தை திசைத்திருப்புகிற வகையில் அவதூறு குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியிருக்கிறார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ. பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜராகி, மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு முன்வராதது ஏன்? இந்த நிலையில் தேவையில்லாமல் ஜெயலலிதாவின் மறைவிற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் தான் காரணம் என்று கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. இத்தகைய கோயபல்ஸ் பிரசாரத்தின் மூலம்; வாக்காளப் பெருமக்களை ஏமாற்ற முடியாது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாழை விவசாயிகளிடம் பயிர் காப்பீட்டு திட்டத்தின்படி ஒரு வாழைக்கு ரூபாய் 14 பிரிமியம் வசூலிக்கப்பட்டது. இதில் தமிழக அரசு ரூ.7, விவசாயிகள் ரூ.7 என்று செலுத்தியிருக்கிறார்கள். ஆனால், இயற்கை சீற்றத்தின் காரணமாக காற்று அடித்து வாழை மரங்கள் வீழ்ந்த போது, ஒரு வாழை மரத்திற்கு ரூ.2.50 தான் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனால் நெல்லை மாவட்ட வாழை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் அதிகளவில் இந்தப் பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடுகிறார்கள். அவற்றை பதப்படுத்தி, நல்ல விலைக்கு விற்பதற்கு தேவையான குளிர்சாதன கிடங்கு இந்த தொகுதியில் இல்லை.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் வேலை வாய்ப்புகள் வழங்குகிற வகையில் தொழிற்சாலைகள் இல்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் நாங்குநேரியில் அமைப்பதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய விடாமல் அ.தி.மு.க. ஆட்சியால் முடக்கப்பட்டது. முறையான தொழில் வளர்ச்சி இல்லாத காரணத்தால் வேலை வாய்ப்பு பெருகவில்லை.

மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குகிற மக்கள் நலன்சார்ந்த ஒரு நல்லாட்சி 2021ல் அமைவதற்கு நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்து, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கைச் சின்னத்தில் ஆதரவு அளித்து அமோக வெற்றி பெற வைக்க வேண்டும்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக ரூபி மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டால் இத்தொகுதியில் நிலவுகிற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிற மக்கள் நலத் தொண்டராக பணியாற்றி, தொகுதி மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்வார் என்று உறுதிமொழியாக கூற விரும்புகிறேன். முன்னாள் ராணுவ வீரராக 15 ஆண்டு காலம் பணியாற்றி, இந்திய மண்ணை பாதுகாத்து, பிறகு அரிமா சங்க தலைவராக, சமூகப் பணியாற்றிய ரூபி மனோகரன் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மக்களின் நலன்களை நிச்சயம் பாதுகாப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.