முருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி

306 0

பள்ளி படிப்பை தாண்டாத முருகனின் கிரிமினல் தனத்திற்கு பின்னால் மூளையாக செயல்பட்டது ஒரு முக்கிய முன்னாள் அதிகாரி என கூறப்படுகிறது.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வங்கி மற்றும் நகைக்கடை கடைகளில் கொள்ளையடித்து 3 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், கூட்டாளிகள் தற்போது போலீஸ் பிடியில் உள்ளனர்.

இதில் முருகன் பெங்களூர் போலீஸ் காவல் விசாரணையிலும், சுரேஷ் திருச்சி மாநகர போலீஸ் விசாரணையிலும், கூட்டாளி மதுரை கணேஷ் சமயபுரம் போலீஸ் காவல் விசாரணையிலும் இருந்து வருகிறார்கள்.

கர்நாடக வங்கியில் 2015-ம் ஆண்டு அடித்த 150 கிலோ தங்கம், சென்னை அண்ணாநகரில் 20 வீடுகளில் நடந்த கொள்ளை, மதுரை நகைக்கடை பஜாரில் அடகுக்கடையில் 1,500 பவுன் கொள்ளை என பல வழக்குகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்த முருகன் கூட்டாளிகள், இந்தாண்டு திருச்சியை மையமாக கொண்டு கொள்ளையடிக்க தொடங்கி இருந்தனர்.

ஜனவரி 7-ந்தேதி உப்பிலியபுரம் வங்கி, 18-ந்தேதி மண்ணச்சநல்லூர் வங்கி, ஜனவரி 26-ந்தேதி சமயபுரம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி என கொள்ளையடித்த முருகன் கூட்டாளிகள் கடைசியில் அக்டோபர் 2-ந்தேதி திருச்சி சத்திரம் பஸ்நிலையம் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் சிக்கிக்கொண்டனர்.

தற்போது 3 தனிப்படை போலீஸ் பிடியில் முருகன், சுரேஷ், கணேஷ் ஆகிய 3 பேரும் பல்வேறு தகவல்களை கூறி வருகிறார்கள். லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த நகைகளை புதைத்து வைத்த இடம், பங்கு கொடுத்தவர்கள் விவரம் என பட்டியலிட்டு தனிப்படையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் ரூ.100 கோடிக்கு மேல் கொள்ளையடித்த நகைகளை உருக்கி விற்று சினிமா படம் தயாரிப்பு, ஆதரவற்றோர் பள்ளிக்கூடம், அலுமினிய பாத்திர உற்பத்தி தொழிற்சாலை, பெங்களூரில் பங்களா என்று முருகன் கூட்டாளிகள் முதலீடு செய்துள்ளனர்.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுற்றுலா வேனை படத்தில் காணலாம்.

சொகுசு கார்கள், வேன்களில் உலா வந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த முருகன் கூட்டாளிகள் உருக்கி விற்ற நகைகளை வாங்கிய அடகுக்கடை உரிமையாளர்கள், நடிகைகள் பட்டியல், திருடிய பணத்தில் குவித்த சொத்துக்கள், பினாமிகள் சொத்துக்கள், வழக்குகளில் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக போலீசாருக்கு கொடுத்த பணம், கார் ஆகியவை குறித்து 3 பேரும் மாறி, மாறி தகவல்களை அளித்து வருகிறார்கள்.

அதன்படி திருடி குவித்த சொத்துக்கள் யார், யாரிடம் உள்ளது என்பது குறித்து தனிப்படை போலீஸ் தனியாக விவரம் திரட்டி உள்ளனர். அவற்றை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த 22 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

தொடர்ந்து கொள்ளையடிக்க முருகன் கூட்டாளிகள் பயன்படுத்திய சொகுசு வேனையும் பறிமுதல் செய்த போலீசார் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையடிக்க பயன்படுத்திய கருவிகள், உடைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அடகு கடைகள் மூலம் உருக்கி விற்கப்பட்ட நகைகள் மீட்கப்படுவதில் சிக்கல் உள்ளது. எனவே முருகன் மற்றும் கணேஷ், சுரேஷ் சொத்துக்களை முடக்கவும் அவற்றை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதிகாரிகளுக்கு கொடுத்த லட்சக்கணக்கான லஞ்ச பணம், கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ய உள்ளார்கள். இவற்றை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து பெற முயற்சி எடுத்து வருகிறார்கள்.

ஒவ்வொரு கொள்ளை சம்பவத்திலும் முருகன் போலீசில் பிடிபடாமல் இருக்க சொகுசு கார்களில் பயணம், கொள்ளையடித்து விட்டு செல்லும் பொழுது சுற்றுலா வேன்களில் குடும்பத்தோடு செல்லுதல், நகைகளை உடனே உருக்கி விற்றல், கொள்ளை பணத்தில் சினிமா, நடிகைகள், செலவு என கணக்கு காண்பித்தல் என்று பள்ளி படிப்பை தாண்டாத முருகனின் கிரிமினல் தனத்திற்கு பின்னால் மூளையாக செயல்பட்டது ஒரு முக்கிய முன்னாள் அதிகாரி என கூறப்படுகிறது.

இது தொடர்பாகவும் போலீஸ் காவலில் 3 பேரிடமும் முக்கிய தகவல்களை திரட்டிய தனிப்படை போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சென்னை இன்ஸ்பெக்டர், முன்னாள் எஸ்.பி. என விசாரணை கோணத்தை திருப்பி உள்ளனர்.