ராஜீவ் கொலை பற்றிய சீமான் பேச்சு கண்டிக்கத்தக்கது- பொன்.ராதாகிருஷ்ணன்

279 0

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கண்டனத்துக்குரியது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் பா.ஜ.க. சார்பில் பாத யாத்திரை நடைபெற்றது. அதனை தொடங்கி வைத்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூய்மை இந்தியா, பெண்ணுரிமை, சமூக நீதி, மது ஒழிப்பு உள்ளிட்ட காந்தியடிகளின் கொள்கைகளை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இந்த பாதயாத்திரை கட்சி சார்பற்றது. அனைவரும் பங்கேற்கலாம்.

சீமான்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கண்டனத்துக்குரியது. எனது மண்ணில், எனது நாட்டை சேர்ந்த ஒரு தலைவரை படுகொலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் மட்டுமல்லாது தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது வாடிக்கையாகி வருகிறது. தேர்தலில் பணம் கொடுப்பவர்கள் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளும் நபர்கள் என இரு தரப்பையும் தண்டிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்.

குறிப்பாக வாக்களிக்க பணம் கொடுத்ததாக நிரூபணம் செய்யப்பட்ட வேட்பாளர் மற்றும் கட்சிகளை அடுத்த 6 ஆண்டுகளுக்கு தொடர்புடைய தொகுதிகளில் போட்டியிட தகுதியற்றதாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.