சுழிபுரம் மாணவி படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

415 0

சுழிபுரம் மாணவி படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்கும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம்  மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

பாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால்  சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் கடந்த 15  மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுகே உள்ளது.

அதனால் சிறுமி படுகொலை வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யவுள்ளது.