தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

230 0

சிலாபம் – தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

சிலாபம் – தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் 70 அடி 6 அங்குலம் உயரத்தில் நீரின் கனவளவு காணப்படுவதால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 2 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், புத்தளம் மன்னார் வீதியின் பழைய எலுவங்குளம் சப்பாத்துப் பலத்தின் மேல் 3 அடி 8 அங்குலத்தில் வெள்ளநீர் மேவிப்பாய்வதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.

 

கடந்த சில நாட்களாக புத்தளத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக கலாஓயா பெருக்கெடுத்தமையால், எலுவங்குளம் சப்பாத்துப் பாலத்திற்கு மேலாக இவ்வாறு நீர் மேவிப் பாய்வதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனால்,  கடந்த 14ஆம் திகதி முதல் புத்தளம் எலுவங்குளம் ஊடாக மன்னார் செல்லும் வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, தப்போவ நீர்த்தேக்கத்தில் 14 அடி 4 அங்குல உயரத்திலும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தில் 31 அடி 2 அங்குலத்திலும், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தில் 10 அடி 8 அங்குல உயரத்திலும் நீரின் கனவளவு காணப்படுவதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரி மேலும்  தெரிவித்துள்ளார்.