பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை இல்லை- கவர்னர் பன்வாரிலால் முடிவு

318 0

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் 7 பேரும் சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்தனர்.

ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை உதாரணமாக கூறி அது போன்று தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அந்த மனு மீதான விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.

அப்போது, “ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக கவர்னர் முடிவு எடுக்கலாம். அரசியல் சட்டப்பிரிவு 161-வது பிரிவை பயன்படுத்தி கவர்னர் இதில் முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது” என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் இந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு சட்டசபையில் ஏற்கனவே ஒரு தடவை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் புதிய உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி இது தொடர்பாக விவாதித்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள்.

கூட்டத்தில் “ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக கவர்னர் 161-வது பிரிவின்கீழ் முடிவு எடுக்க வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த அமைச்சரவை தீர்மானம் உடனடியாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து ராஜீவ் கொலையாளிகள் வி‌ஷயத்தில் கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. சட்ட நிபுணர்களையும் அழைத்து கவர்னர் பன்வாரிலால் கருத்து கேட்டதாக தகவல் வெளியானது. அதன் பிறகு ராஜீவ் கொலை கைதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் கவர்னரை சந்தித்து பேசினார்கள்.

இதைத் தொடர்ந்து 7 பேர் விடுதலையை எதிர்ப்பவர்களும் கவர்னரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று மனு கொடுத்தனர். ஆனால் இந்த வி‌ஷயத்தில் கவர்னர் பன்வாரிலால் எந்தவித கருத்தையும் வெளியிடாமல் இருந்தார்.

கவர்னர் பன்வாரிலாலுக்கு, தமிழக அமைச்சரவை கோரிக்கை விடுத்து ஓராண்டு கடந்து விட்டது. எனவே ராஜீவ் கொலையாளிகள் வி‌ஷயத்தில் கவர்னர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் மறுத்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ராஜீவ் கொலையாளிகளை 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விட்டது தெரிய வந்துள்ளது. இந்த நிராகரிப்பை கவர்னர் பன்வாரிலால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் தனது முடிவை அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் மறுத்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய கடந்த 2014-ம் ஆண்டு முதலே அ.தி.மு.க. அரசு தொடர்ந்து முயற்சிகள் செய்தது. இது குறித்து கவர்னருக்கு பல தடவை நினைவூட்டல் கடிதங்களையும் எழுதியது. அப்போதெல்லாம், கவர்னர் ஆய்வு செய்து வருகிறார் என்று பதில் அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ராஜீவ் கொலையாளிகள் விடுதலை இல்லை என்று கவர்னர் பன்வாரிலால் திட்டவட்டமாக முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னரின் இந்த முடிவால் தமிழ் ஆர்வலர்களும், அ.தி.மு.க.வினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.