பொருளாதார அறிவின்மையினாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் வரிகளை குறைப்பதாகவும் நீக்குவதாகவும் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.
அவரின் இவ்வாறான கருத்துக்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். வரிகளை நீக்கினால் அதனால் அரசாங்கத்தின் வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சிக்கான நிதியை எங்கிருந்து பெறுவார்? இதை கோத்தா விளக்க வேண்டும். ஊடகங்களின் கேள்விகளில் இருந்து தப்பித்து செல்லாமல் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் நேரடி பொருளாதார விவாதத்துக்கு வர வேண்டும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
பெறுமதிசேர் வரியை 8 வீதத்தால் குறைக்க போவதாகவும் சம்பள கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய வரி, சகல விவசாய வரி, வர்த்தக சமூகத்தினருக்கான வரி, தொலைபேசி வரி ஆகிய வரிகளை நீக்கப் போவதாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய தெரிவித்திருக்கிறார். பொருளாதாரம் தொடர்பில் அறியாமையினாலேயே இவ்வாறான கருத்துக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
எது எவ்வாறிருந்தாலும் இந்த யோசனையை இவ்வாறே நடைமுறைப்படுத்தினால் முழு நாடும் வீழ்ச்சியை சந்திக்கும். நோயாளி ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிகிச்சை பெற்று படிப்படியாக குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகையில், மீண்டும் நோயாளியாக்குவது போன்றே கோத்தாவின் இந்த யோசனைகள் அமைந்துள்ளன. வட் வரியினூடாக 2019 ஆம் ஆண்டு 530 பில்லியன் ரூபா வரவை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. கோத்தா கூறுவது போன்று 15 வீதத்தில் உள்ள பெறுமதி சேர் வரியை 8 வீதத்தால் குறைத்தால் ஒருவருடத்தில் ஒவ்வொரு நாளும் 350 பில்லியன் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும்.
இந்த அரசாங்கத்தை குறைகூறும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிகாலத்தில் தான் சகல வரிகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன. 2006 ஆம் ஆண்டு 20 வீதமாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டது மாத்திரமல்லாமல், சகல அத்தியாவசியப் பொருட்களுக்கும் அந்த வரி அறவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேர்தலை மையமாக கொண்டு 2014 ஆம் ஆண்டு அந்த பெறுமதி சேர் வரி 11 வீதமாக குறைக்கப்பட்டது. நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு அந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக வரையறுத்தோம்.
ஆனால் தற்போது அடிப்படை பாவனை பொருட்களுக்கு இந்த பெறுமதி சேர் வரி அறவிடப்படுவதில்லை.
மறுபுறம் சம்பள கொடுப்பனவுகளுக்கான வரியை நீக்கப்போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
எதன் அடிப்படையில் இந்த யோசனையை முன்வைத்தார் என்பது எனக்கு புரியவில்லை. எது எவ்வாறாயினும் கொடுப்பனவுகளுக்கான வரி அறவீட்டு தொகையை 62500 ரூபாவிலிருந்து 100,000 ரூபாவாக இந்த அரசாங்கமே அதிகரித்தது. மஹிந்தவின் ஆட்சியில் 62500 ரூபா கொடுப்பனவுகளை பெற்ற சகலரிடமும் இந்த வரி அறவிடப்பட்டது.
பொய் செய்திகளினூடாக மக்களை ஏமாற்றுவதற்கு இவர்கள் முயற்சித்து வருகிறார்கள். ஆகவே அடுத்த வரவு செலவு திட்டத்தில் கொடுப்பனவுகளுக்கான வரி அறவீட்டு தொகையை 150,000 ரூபாவாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம். 2019 ஆம் ஆண்டில் கொடுப்பனவு வரியினூடாக 62 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்கிறோம். ஆகவே ஒருபுறம் பெறுமதி சேர் வரியினுடாக 530 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்கிறோம். அதற்கமைய பெறுமதி சேர் வரியின் வீதத்தை குறைத்தால் ஒருவருடத்துக்கு 450 415 பில்லியன் ரூபா வரையில் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும்.
முன்னெப்போதும் இல்லாதவாறு கடனை மீள் செலுத்தி வருகிறோம். இந்த வருடத்தில் மாத்திரம் 747 பில்லியன் ரூபா கடன் செலுத்தியிருக்கிறோம். ஆகவே அடுத்த வருடமாகும் போது சகல கடனையும் ட்ரில்லியன் பெறுமதியில் செலுத்த வேண்டியேற்படும்.
அதற்கமைய 2020 இல் 1.1 ட்ரில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியேற்படும். ஆயினும் எங்களின் பொறுப்பை சரியாக செய்து வருகிறோம். சரியான சந்தர்ப்பத்தில் கடனை மீள் செலுத்துவதோடு மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குதல், அபிவிருத்திகள் என சகல விடயங்களையும் முறையாக செய்துள்ளோம்.
விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களையும் வழங்கியே வருகிறோம். மறுபுறம் தொடர்பாடல் வரியும் குறைக்கப்பட்டே இருக்கிறது. இவ்வாறிருக்கையில், கோத்தபாயவின் இந்த அறிவித்தல் இயல்பான செயற்பாடுகளுக்கு புறம்பானதாகும்.
ஆகவே தொடர்ந்து பொய் கூறாமல் கோத்தபாய ராஜபக்ஷ எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் பொருளாதார நேரடி விவாதத்துக்கு வர வேண்டும். சஜித் எந்த பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்து செல்ல நினைப்பவர் அல்ல. ஊடகங்களுக்கு நேருக்கு நேர் பதிலளிக்கக் கூடியவர். ஆகவே அவருடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு கோத்தபாய வரவேண்டும் என்றார்.