அனைத்துத் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தவே தேர்தலில் களமிறங்கினேன்- பாணி விஜேசிறிவர்தன

242 0

நாட்டின் அனைத்துத் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே நாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என சோசலிச சமத்துவ கட்சியின் ஐனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன தெரிவித்தார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாணி விஜேசிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக சளைக்காது போராடிய வரலாறு எங்களுக்கு உண்டு.

இந்தக் கட்சி ஆரம்பித்த நாள் முதல் தமிழ் மக்களுக்காக போராடி வருகின்றோம். 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற இன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடிய வரலாறு எங்களுக்கு உண்டு.

1983 ஆம் ஆண்டு தமிழருக்கு எதிரான இன அடக்குமுறை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து அவர்களுக்காக போராடினோம். யுத்தத்திற்காக ஒரு சதமேனும் ஒதுக்கக்கூடாது என வலியுறுத்தினோம். அதுமட்டுமல்லாது வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.

அரசாங்கத்தின் இனவாதத்திற்கு எதிராகவும், விடுதலைப்புலிகளின் பிரிவினைவாதத்திற்கு எதிராகவும் சர்வதேச சோசலிஷ வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடிய இயக்கம் எங்களுடையது.

அனைத்துத் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தவே  தேர்தலில்  களமிறங்கியுள்ளோம்.  பாரிய அரசியல் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் தான் இந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது.

நவம்பர் 16 ஆம் திகதி எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனா மீது தொடுக்கும் யுத்தத்தில் இலங்கை ஆளும் வர்க்கத்தினை தமது பிடிக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றது. இதனால் இலங்கை பெருமளவில் பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.