ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

369 0

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்கள் நால்வரிற்கு விஷேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் அடிப்படையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் புதிய பாதுகாப்பு தொடர்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க, மகேஷ் சேனாநாயக ஆகியோருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரிற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் குறித்த வேட்பாளர்களுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இருவர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் இருவர், புதிய பாதுகாப்பு தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேவையான பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.