தமிழ் தேசிய கூட்டமைப்பின் அண்மைய நடவடிக்கைகளால் சஜித் பிரேமதாச கடுமையான அதிருப்தியடைந்துள்ளார். இதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரிலேயே அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐந்து கட்சிகள் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சமர்ப்பிக்கும் ஆவணமொன்றில் கையொப்பமிட்டிருந்தன. இந்த ஆவணம் தன்னை தோற்கடிப்பதற்கான ஆவணமென ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கருதுகிறார். இந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் மூன்றிடமும் அவர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால வரைபை அடிப்படையாக வைத்து, புதிய ஆட்சியில் அரசியல்தீர்வு முயற்சி நடத்தப்படும் என தான் தனிப்பட்டரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களிடமும் வாக்குறுதியளித்துள்ள போதும், அதை நம்பாமல் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டதன் நோக்கம் என்னவென தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் சஜித் நேரடியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிற்கும், கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் திரைமறைவு இணக்கப்பாடு ஏற்பட்டதன் பின்னணியில்தான் ஐந்து கட்சிகள் இணைவு நடந்ததா என்ற வலுவான சந்தேகம் சஜித் தரப்பிடம் ஏற்பட்டிருப்பதை தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்தது.
கோட்டாபய- சுமந்திரனிற்கிடையில் மிக அண்மைய நாளிலும் தொடர்ச்சியாக இரண்டு சந்திப்புக்கள் நடந்திருந்தன. கோட்டாபய- சுமந்திரன் சந்திப்புக்கள் தோல்வியில் முடிந்ததாக அண்மையில் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த போதும், அந்த சந்திப்புக்கள் தோல்வியில் முடியவில்லையென நம்பகரமான தகவல்களும் உள்ளன
கோட்டாபய- சுமந்திரன் திரைமறைவு இணக்கப்பாட்டின் அடிப்படையில்தான் ஐந்து கட்சிகள் இணைவு நடந்தது என்று ஊகிக்கும் விதமாக வலுவான பிற காரணங்களும் உள்ளன.
ஐந்து கட்சிகளின் இணைவிற்கு பல்கலைகழக மாணவர்கள் முயற்சி மேற்கொண்டது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் பின்னணியில்தான் என்பதை உள்கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டுள்ளனர்.
கட்சிகளிற்கிடையில் இணக்கப்பாடு ஏற்படுத்தும் முயற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நேரில் சந்தித்திருந்தனர். தொடர்ந்து மூன்று சந்திப்புக்கள் நடந்திருந்தன. பின்னர், யாழ் பல்கலைகழகத்தில் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனும் நேரில் வந்து பேசியிருந்தார். இந்த சந்திப்புக்கள் முடிந்த மறுநாள், ஏற்கனவே பொது வேட்பாளர் முயற்சியில் ஈடுபட்டிருந்த, உள்ளூர் கட்டுரையாசிரியர்களை நேரில் சந்தித்த பல்கலைகழக மாணவர்கள், ஐந்து கட்சிகளின் இணக்கப்பாட்டை தாம் ஏற்படுத்தட்டுமா என கேட்டிருந்தார்கள். பொதுவேட்பாளர் முயற்சி தோல்வி, நீங்கள் இந்த பணியை ஆரம்பிக்கலாமென அவர்கள் குறிப்பிட்டதையடுத்தே, கட்சிகளிற்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியை மாணவர்கள் ஆரம்பித்திருந்தனர்.
தமது முயற்சியின் பின்னணியில் இலங்கை தமிழ் அரசு கட்சியே இருந்தது என்பதை, இந்த முயற்சியில் ஈடுபட்ட, பல்கலைகழக மாணவர் ஒன்றிய முக்கியஸ்தர் ஒருவர் தகவல்களை கசிய விட்டுள்ளார்.
1970களின் தொடக்கத்தில், தமிழ் அரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் தோல்வியடைந்தபோது, ஒரு உபாயமாக தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியதை போலவே, இந்த ஏற்பாடு இருந்ததா அல்லது கோட்டாவுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் பல்கலைகழக மாணவர்கள் கருவியாக பயன்படுத்தப்பட்டார்களா என்பதை உடனடியாக உறுதி செய்வதில் சிரமங்கள் இருக்கும். எனினும், இரண்டாவது சாத்தியத்திற்கே அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிகிறது.
ஐந்து கட்சி ஆவணம் தென்னிலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்தை ஆதரித்தால், சஜித்தின் தோல்வி நிச்சயமானது. சஜித்தை தோற்கடிக்க, மிக திட்டமிட்ட ஒரு நகர்வாக, “கண்ணுக்கு தெரியாமல்“ ஒரு கூட்டமைப்பு பிரமுகர் இந்த நகர்வை திட்டமிட்டிருக்க வலுவான வாய்ப்புக்களிருப்பதாக தெரிகிறது.
இதுவரை மற்றைய விடயங்களில் ஏனைய கட்சிகளை ஒன்றிணைக்கவோ, ஆலோசிக்கவோ மறுத்து வந்த தமிழ் அரசு கட்சியின் தலைவர்கள், திடீரென இந்த முயற்சியில் இறங்கி, ஒரேநாளில் சடுதியான மாற்றத்தை வெளிப்படுத்தி, ஏனையவர்களை அரவணைத்தது குறித்த ஆச்சரியம் பரவலாக இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
சஜித்தை தோற்கடிக்கும் நோக்கத்துடன் ஐந்து கட்சி ஆவணம் முயற்சி நடந்திருந்தால், அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தெரிந்திருக்கவே வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இந்த ஆவணம் வெளியான பின்னர் ஐ.தே.க கூட்டணியிலுள்ள முக்கிய கட்சி தலைவர்கள் பலரும், கூட்டமைப்பின் பிரமுகர்களை தொலைபேசியில் அழைத்து தமது அதிருப்தியை வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.