இலங்கை இந்திய பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையான எட்காவின் மூலம் இலங்கைக்கு பாதிப்புக்கள் இல்லை என்று பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.
எட்கா உடன்படிக்கை தொடர்பிலான அரசாங்கத்தின் கூட்டு ஆய்வுக்குழுவின் உறுப்பினராக செயற்படும் பேராசிரியர், ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
எட்கா உடன்படிக்கை காரணமாக, இந்தியாவின் பணியாளர்கள் இலங்கையின் தொழில்சந்தைக்கு வருவார்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், இலங்கையின் குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் உள்ள அம்சங்களில் எட்கா தாக்கம் செலுத்தாமையால், இந்திய பணியாளர்கள் இலங்கையின் தொழில்சந்தைக்கு உள்வாங்கப்படுவார்கள் என்ற கருத்து பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் எட்காவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
எட்கா இலங்கையின் தொழில்வாய்ப்புக்களை கொண்டு செல்லாது. எனினும் போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்று சமரஜீவ குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் மூலம் இந்தியாவின் தொழில்சார் நிபுணர்களுக்கு இலங்கையில் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மாத்திரமே அவ்வாறான ஏற்பாடு உள்ளது என்று சமரஜீவ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் சமூக மற்றும் கலாசாரத்தை பொறுத்தவரையில் பல மாற்றங்கள் உணரப்பட்டுள்ளன.
எனவே எட்காவின் மூலம்தான், கலாசாரத்தில் மாற்றம் ஏற்படும் என்பதை எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் பெறும் நோக்கிலேயே இந்தியா இவ்வாறான உடன்படிக்கைகளை இலங்கை உட்பட்ட அபிவிருத்தி அடைந்துநாடுகளுடன் செய்துக்கொள்ளமுனைகிறது என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டிள்ளார்.
எட்காவை பொறுத்தவரை, அது இலங்கைக்கு அதிக முதலீடுகளை கொண்டுவரும் என்றும் சமரஜீவ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை பொறுத்தவரையில் தொழில்வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும்.
எனில் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படவேண்டும்.
உலக பொருளாதாரத்துடன் இணைப்பை கொண்டிருக்கவேண்டும்
எனவே இலங்கை முதலீடுகள் மற்றும் சேவைகள் தொடர்பான பல உடன்படிக்கைகளை செய்துக்கொள்ளவேண்டும் என்றும் சமரஜீவ ஆலோசனை வழங்கியுள்ளார்.