தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வென்று கிடைக்கும்- நம்பிக்கை வெளியிட்ட சம்பந்தன்

361 0

download-1ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இடையில் தமிழ் மக்களுக்கான ஆக்கபூர்வ தீர்வொன்று இந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்கிவைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று இரவு தேசிய தீபாவளிப் பண்டிகை நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடே இத்தகைய தேசிய பண்டிகையாகும் என்று குறிப்பிட்டார்.

இதனை நல்லுள்ளத்துடன் வரவேற்பதாகவும், தற்போதைய நல்லாட்சியில் எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது என்றும் கூறினார்.

அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை தமக்கிருக்கிறது எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்பார்ப்பு வெகுவிரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறினார்.