யாழில் பல்கலை மாணவர்களின் கொலை தொடர்பான புலன் விசாரணை அறிக்கை அடுத்தவாரம் வெளியாகும்

340 0

23471477066701mயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் விசேட விசாரணையாளர்கள் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையிலேயே பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்திலுள்ள குளப்பிட்டிச் சந்தியில் கடந்த 20 ஆம் திகதி இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

எனினும் இதனை ஒரு விபத்தெனக் கூறி மூடிமறைக்க பொலிசார் முயற்சித்த போதிலும் பிரேத பரிசோதனையின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவனின் உடலில் துப்பாக்கிச் சன்னம் துளைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக கொக்குவில் பிரதேசத்தில் கடமையில் இருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் பணி இடைநிறுத்தமும் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் மாணவர்களின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில் பொலிஸ் ஆணைக்குழுவும் தனித்து விசாரணையொன்றை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் பிரித்தியேகமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே பொலிஸ் ஆணைக்குழுவின் விசேட விசாரணையாளர்கள் நடத்திய விசாரணையின் அறிக்கையும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு அறிக்கையும் அடுத்தவாரம் கிடைக்கும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.