இரண்டு வருடங்களை எட்டியுள்ள மீரியபெத்த மண்சரிவு சம்பவம்

320 0

meeriapeththaபதுளை – கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் 39 பேரது உயிரைக் காவுகொண்ட மண்சரிவு ஏற்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.50 அளவில் மீரியபெத்த தோட்டத்திலுள்ள பாரிய மலை சரிந்ததில் அங்கிருந்த 7 லயன் அறைகள் முற்றாக மண்ணுக்குள் புதையுண்டன.

இந்த அனர்த்தத்தில் 39 பேர் உயிரிழந்ததோடு, அதில் 20 பேரது சடலங்களே மீட்கப்பட்டிருந்தன.

மண்சரிவினால் நூற்றுக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்ததோடு பலர் அநாதைகளாகினர்.

இடம்பெயர்ந்தவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பூனாகலை மற்றும் கொஸ்லந்தை ஆகிய பாடசாலைகளிலும், அங்குள்ள தேயிலை தொழிற்சாலைகளிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட முழுமைப்படுத்தப்பட்ட 75 வீடுகள் கடந்த 22ஆம் திகதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் மலைநாட்டு வீடமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோரது தலைமையில் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

எனினும் இந்த அனர்த்தத்தில் பாதிப்பிற்கு உள்ளான 22 குடும்பங்கள் அனர்த்தம் ஏற்பட்ட பகுதியிலிருந்து நூறு மீட்டர் தூரத்திலுள்ள லயன் அறைகளில் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்றைய தினம் இரண்டுவருட பூர்த்தியை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.