ஊடகங்கள் பொலிஸாருக்கு அச்சுறுத்தலாக உள்ளன- சாகல ரத்நாயக்க

346 0

sagalaஇலங்கையில் வேகமாக வளர்ந்து வருகின்ற நவீன ஊடகமும், சமூக வலைத்தளப் பாவனையினால் பொலிஸாருக்கு பெரும் சவால் ஏற்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சியை விடவும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் ஊடகங்களுக்கு பெருமளவில் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கான நிர்வாகக் கட்டிடம் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றபோது, அங்கு உரையாற்றிய அமைச்சர், சமூக வலைத்தளங்கள் மற்றும் நவீன ஊடகங்களின் செயற்பாடுகளினால் பொலிஸ் துறையில் அதற்கு ஏற்றாற்போல் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமான கருத்துக்கூறுவதற்கான உரிமை இருக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர், நல்லாட்சி அரசாங்கத்தில் அந்த சூழ்நிலை மாற்றிப் போடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா என்ற ஆயுதக் குழு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் அமைச்சர் சாகல ரத்நாயக்க பதிலளிக்காமல் நழுவிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.