திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி முருகன் திருச்சி அருகே புதைத்து வைத்திருந்த 12 கிலோ தங்க, வைர நகைகளை போலீஸார் நேற்று கைப்பற்றினர்.
அக். 2-ம் தேதி அதிகாலை திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருவாரூர் மணிகண்டன், முக்கிய குற்றவாளி முருகனின் சகோதரி கனகவல்லி ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், கனகவல்லியின் மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரு நீதிமன்றத் திலும் சரணடைந்தனர்.
பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸார் முருகனை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் அனுமதி பெற்று, அவரை அழைத்துக் கொண்டு திருச்சிக்கு 2 கார்களில் நேற்று வந்தனர்.
திருச்சி மாநகர காவல் துறை யினருடன் இணைந்து பொம்மன ஹள்ளி போலீஸார் முருகனிடம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், திருச்சி திருவெறும்பூர் அருகே பூசத்துறை காவிரிக்கரைப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 11.5 கிலோ எடையுள்ள தங்க நகைகள், அரை கிலோ எடையுள்ள வைர நகைகள் என ரூ.4.30 கோடி மதிப்புள்ள நகைகளைக் கைப்பற்றினர்.
வாகன சோதனையின்போது
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே ஆத்தூர் சாலையில் நேற்று சென்ற கர்நாடக மாநில பதிவெண் கொண்ட 2 கார்களை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் போலீ ஸார் பிடித்தனர். அதில் ஒன்றில் பிரஸ் (PRESS) என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
சந்தேகத்தின்பேரில், காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, “நாங்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸார். நீதிமன்ற உத்தரவு பெற்று திருட்டு வழக்கில் தொடர் புடைய குற்றவாளியுடன் வந்து நகைகளை மீட்டுச் செல்கிறோம், எங்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம்” என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
போலீஸ் விசாரணை
இதையடுத்து, பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கர்நாடக மாநில போலீஸாரிடம் பெரம்பலூர் எஸ்.பி நிஷா பார்த்திபன், திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்டோர் விசாரணை செய்தனர்.
பின்னர், அவர்களிடமிருந்த 12 கிலோ தங்க, வைர நகைகள் திருச்சி கல்லணை அருகே காவிரிக் கரையில் மரங்கள் அடர்ந்த பகுதி யில் கொள்ளையன் முருகனால் புதைத்து வைக்கப்பட்டு, தற்போது அவரால் அடையாளம் காணப் பட்டு கைப்பற்றப்பட்டவை என்பதை அறிந்து அவர்களை பெங்களூரு வுக்குச் செல்ல அனுமதித்தனர்.
இந்த நகைகள் பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின், அங்கிருந்து பெற்று வந்து லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை தொடர்பான வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் படும் என திருச்சி மாநகர காவல் துறையினர் தெரிவித்தனர்.