புத்தளம் மன்னார் வீதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் கே.கே. வீதியைச் சேர்ந்த நடராஜா தர்மலிங்கம் (வயது 70) எனும் புத்தளம் மன்னார் வீதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் கணக்காளராக கடமைபுரிந்துவந்த வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7.40 மணியளவில் குறித்த வயோதிபர், கோயிலில் கடமைகளை முடித்துக்கொண்டு வீடு செல்வதற்காக கோயிலுக்கு முன்னால் உள்ள மஞ்சள் கடவை ஊடாக வீதியைக் கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, புத்தளம் நகரிலிருந்து வன்னாத்தவில்லு நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய வேன் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வேன் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.