மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உண்டு-சுனில் ஹந்துநெத்தி

372 0

 

sunilகோப் குழுவில் காணப்படுகின்ற விடயங்களை வைத்துக்கொண்டு மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்று அக் குழுவின் தலைவரும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் மோசடியாளர்களைப் பாதுகாப்போர் மற்றும் மோசடிக்கு உதவியோர் ஆகியோர் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் காணப்படுவதாக அவர் கூறினார்.

மத்திய வங்கியின் முறிகள் மோசடி உட்பட பல்வேறுபட்ட மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்திய கோப் குழு தனது அறிக்கையை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளது.

இந்நிலையில் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட சுனில் ஹந்துன்நெத்தி…….

‘மத்திய வங்கியின் பிணை, முறி மோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன. அடுத்து நடத்தவேண்டிய விசாரணை ஒன்று இருக்கின்றது. இந்த மோசடியை வெளிகொணர்வதை தடுப்பதற்கு மேற்கொண்ட பிரயத்தனங்கள் தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டியதாயிருக்கிறது. அதனை வெளிப்படுத்த வேண்டும். இதுதொடர்பான விசாரணைகளுக்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

இதேவேளை கோப் குழுவின் அறிக்கையை பயன்படுத்தி வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உள்ளது.

இந்த அறிக்கை மிகவும் திறந்த அறிக்கையாகும்.நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை பொதுமக்களினதும் உரிமையாகும். இந்த அறிக்கை மீதான விவாதத்தை நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் மிகச் சிறப்பாக இரண்டாகப் பிரிந்து நடத்துவார்கள். ஆனால் இந்த நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய ஒரு கடமை உள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள், முதலீட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட எமது நாட்டில் உள்ள ஆய்வுகளை மேற்கொள்கின்றவர்கள் இந்த கோப் அறிக்கையை ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் ஆழமானதால் அவற்றை சரிவர தெளிவாக உள்வாங்கினால் இந்த நாட்டில் மோசடியாளர்கள் யார் என்பதையும், அவர்களை காப்பாற்றுவோர் யார் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.எனவே வாக்கெடுப்பில் பங்கேற்பவர்கள் யார்? திருடர்களைப் பாதுகாப்போரும், மோசடியாளர்களை வெளிப்படுத்துவோருமே ஆவர்’ என்றும் குறிப்பிட்டார்.