மீனவர்களைக் கைதுசெய்வதை நிறுத்துக-மன்னார் நீரியல்வள திணைக்களத்தினர் கடற்படையினரிடம் கோரிக்கை

367 0

mannarகடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கடற்படையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைய நாட்களாக கடற்படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் சட்டத்திற்கு முரணாக கைதுசெய்யப்படுவதாகவும் மீனவர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்தே  நீரியல்வள திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த 18 ஆம் திகதி இரவு கிராமத்திற்குள் புகுந்த கடற்படை சிப்பாய்களை தாக்கிய சம்பவத்தை அடுத்து குறித்த கிராமத்தைச் சேர்ந்த  மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்வதும், மறித்து வைக்கும் சம்பவங்கள் தொடரும் நிலையில், கடற்படை  அதிகாரிகள் மீனவர்களை கைதுசெய்ய முடியுமா, கடற்படை அதிகாரிகளின் பணிகள் என்ன,  எதற்காக மீனவர்களை கைதுசெய்ய கூடாது போன்ற  பல  விடயங்கள் தொடர்பாக கடற்படையினருக்கு  தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீரியல்வள திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படடுள்ளது.

மன்னார் – சிலாபத்துறை கடற்படை முகாமில் நேற்று மாலை 4.00 மணிக்கு இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட கடற்படை கட்டளைத் தளபதி, கடற்படையினர், இராணுவத்தினர், மன்னார் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள்,  மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள், அந்த பகுதியைச் சேர்ந்த கிராம அலுவலகர்கள் என  பலர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போதே கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்யவேண்டாம் என கடற்படை அதிகாரிகளுக்கு மன்னார் மாவட்ட நீரியல்வள திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.