வெற்றிபெற்று அடுத்தநாள் காலை சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன்– கோட்டா

309 0

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றவுடன், சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் 17 ஆம் திகதி காலை விடுதலை செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று (புதன்கிழமை) அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2019 ஜனாதிபதித் தேர்தலில் எமக்கான வெற்றி தற்போது உறுதியாகியுள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால், இராணுவ ஆட்சி வந்துவிடும் என்று கூறுகிறார்கள்.

ஆனால், 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகுதான், இராணுவத்தினருக்கு மரியாதையான யுகமொன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த யுகம் 2015 ஆம் ஆண்டுடன் இல்லாது போனது.

இராணுவத்தினர், புலனாய்வுப் பிரிவினரை தண்டிக்கும் ஒரு கலாசாரத்தையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து, எம்மால் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரதத்தை 10 வருடங்களுக்குள்ளேயே இந்த அரசாங்கம் இல்லாது செய்துள்ளது. இதனை மக்கள் மறந்துவிடக்கூடாது.

இந்த நாட்டில் மீண்டும் சுதந்திரத்தையும், அச்சமில்லாத சூழ்நிலையையும் ஏற்படுத்த வேண்டியது எனது கடப்பாடாகும். இதனை நான் நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பிறகு மேற்கொள்வேன் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.

இன்று இந்த நாட்டு மக்கள், 5 வருடங்களுக்கு முன்னர் இருந்த இலங்கையைத் தான் எதிர்ப்பார்க்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் அரசாங்கத்தால் சிறைக்கு அனுப்பப்பட்ட அனைத்து இராணுவத்தினரையும் நான் வெற்றிபெற்றவுடன், 17 ஆம் திகதி காலை விடுதலை செய்வேன் என்பதையும் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.

இதற்காக எனக்கு மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நான் பூரணமாக நம்புகிறேன். அச்சம், சந்தேகம் இல்லாத நாட்டை நாம் உறுதிப்படுத்துவோம்.

இந்த ஒத்துழைப்புடன் சிறப்பான சமூகமொன்றை உருவாக்குவோம். எதிர்க்கால சந்ததியினருக்கான அழகியதொரு நாட்டை நாம் நிச்சயமாக கட்டியெழுப்புவோம்” என கூறினார்.