அகரம் எழுதி அரிச்சுவடி ஓதி தமிழ் ஊட்டி வளர்ப்போம் !!! “ , பேர்லின் தமிழாலயத்தில் இவ்வருடம் மீண்டும் புதிய மழலையர்களுக்கு நடைபெற்ற வரவேற்புவிழா ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் ‘ஏடுதொடக்கல்’ என்னும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நடைமுறையில் உள்ளது.
ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் கல்வி பெறும் முக்கியத்துவத்தைக் கண்டறிய ஏடுதொடக்கல் நிகழ்வையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம்.ஏடுதொடக்கல் நிகழ்வுக்குச் சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் ஒரு சமூக இயங்கு நிலை உள்ளது என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. அந்தவகையில் புலம்பெயர்ந்த நாட்டில் பிறந்தாலும் குழந்தைப் பருவத்திலிருந்து முதல்முதலில் தமிழ் கல்விபயில ஆரம்பிக்கும் முன்னதாக அவர்களுக்கு தொடங்கப்படுவதே ஏடுதொடக்கல் .நேற்றைய தினம் விஜயதசமியை முன்னிட்டு எமது பேர்லின் தமிழாலயத்தின் காரியாலயத்தில் புதிதாக சேர்ந்த மழலையர்களில் ஒரு குழந்தைக்கு எமது தமிழாலயத்தின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரான திருமதி சுசிலா உத்தமபுத்திரன் அவர்களால் ஏடுதொடங்கப்பட்டமையானது.
எமது தமிழாலயத்திற்கு பெருமையைத் தேடித்தந்துள்ளது. சென்ற வாரம் அன்று பேர்லின் தமிழாலயத்தில் புதிய மழலையர்களுக்கான ஆரம்பவிழா தமிழாலயத்தின் நீண்ட கால ஆசிரியையும்,மழலையர்களுக்கு சிறந்தமுறையில் ஆரம்பக்கல்வி கற்பித்தலில் அனுபவமுள்ளவருமான ஆசிரியை திருமதி மங்களநாயகி மனோகரன் அவர்களின் தலைமையில் இளம் ஆசிரியைகளுடனும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 06.10.2019 அன்று பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்திற்கும் ஒரு பகுதி தமிழாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்று வழிபட்டனர். இச் சந்தர்ப்பத்தில் புதிய மாணவர்களை எமது பேர்லின் தமிழாலயத்திற்கு சேர்த்த பெற்றோர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.